
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(09) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
எனினும் அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.