
இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்துடன் இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ள இலங்கை, இந்த மூன்று நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
2018 இல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தாய்லாந்து அதிகாரிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதான அதிகாரி கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி, மார்ச்சில் ஆரம்பமாகுமென அவர் தெரிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது முதலீட்டை கவர்வது குறித்தே கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட்19 தொற்று காரணமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன. நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்காக சென்றுகொண்டிருக்கின்றோம் என தாய்லாந்து அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.