உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், ஐநா. சபையில் நேற்று நிறைவேறியது. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி, தன்னுடன் இணை த்து கொண்டது.
இதை கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, நிகரகுவா ஆகிய 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும், இந்தியா, சீனா தவிர தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 19 ஆப்பிரிக்க நாடுகள், பாகிஸ்தான், கியூபா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடிஐநா. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை உக்ரைன் போர் சூழலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பேசினார். இதற்கு, ஐநா.வில் நேற்று ஐநா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருசிரா கம்போஜ் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், `இந்தியாவுக்கு எதிராக மேம்போக்கான, அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு, ஐநா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த முயற்சிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் முழு பகுதியும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்,’ என்று தெரிவித்தார்.