பாகிஸ்தானில் ஓடும் பஸ்சில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பாகிஸ்தானில் சமீபத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் 1,700 பேர் பலியாகினர். 33 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 பேருடன் தாது மாவட்டத்தில் உள்ள கைர்பூர் நாதன் ஷாவிலிருந்து கராச்சி நோக்கி நேற்று முன்தினம் பஸ் சென்றது.
சிந்து மாகாணத்தில் உள்ள நூரிபாத் காவல் நிலையம் அருகே நேற்றிரவு வந்தபோது, ஏர் கண்டிஷன் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதில் சிக்கி 12 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடி கொண்டிந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமா க இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.