மூட்டுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக். 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியது. இருப்பினும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலி ‘மூட்டுவலி’ (ஆர்த்ரிடிஸ்) எனப்படுகிறது. இதற்கு உடல்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை பொதுவான காரணங்கள். முதியோர் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
வயதாகஆக, குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது இயற்கை. இதற்கு ‘முதுமை
மூட்டழற்சி'(Osteoarthritis) என்றுபெயர். முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக இருக்கும். ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் இந்தவழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது; குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும் போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்பு திசுக்கள் தேய்ந்துவிடும். இதன்விளைவால், முழங்கால்மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல மூட்டுவலி ஏற்படுகிறது.