சீனாவின் தெற்கு மாகாணமான ஹுனானின் தலைநகரான சாங்ஷா நகரில் 42 மாடி உயர கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, சீன அரசின் தொலைதொடர்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கட்டிடத்தில் நேற்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பல மாடிகளுக்கு பரவியது. காற்றின் வேகத்தால் தீ கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடினர்.தீயணைப்பு துறையினர் 280 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் வெடித்து சிதறியதால், அருகாமையில் கட்டிடங்களில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர். 42 மாடி கட்டிடம் கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் வைரலாகின.