ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அறிவுரை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய போது, “இது போருக்கான காலம் அல்ல” என அறிவுரை கூறினார். மேலும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்கள் பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நேற்று நடந்தது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அந்நாட்டுக்கு சென்றார். அங்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயவ் மோடியை வரவேற்றார். இந்நிலையில், சமர்கண்டில் நேற்று மாநாடு நடந்தது. ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தொற்றை உலகம் முறியடித்து வருகிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் இளம், திறமைமிக்க பணிப் படை இயல்பாகவே போட்டியை உருவாக்கி உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும். உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இதுவே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். தற்போது இந்தியாவில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100 யூனிகார்ன்கள் உள்ளன. அனைத்து துறைகளிலும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறோம். கொரோனா, உக்ரைன் – ரஷ்ய போரால் உலகளாவிய வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டது.

இதனால் உலக நாடுகள் பலவற்றில் எரிசக்தி, உணவு பிரச்னைகள் ஏற்பட்டன. எனவே, பிராந்தியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் இடையே போக்குவரத்து அணுகலுக்கான பரஸ்பர உரிமைகள் வழங்க வேண்டும். ஆப்கானுக்கு பாகிஸ்தான் வழியாக உணவுப்பொருட்கள் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டின் போது துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், இருதரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘இந்தியாவும் ரஷ்யாவும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இன்றைய காலம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷ்யா, உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்’’ என்றார். பின்னர் பேசிய அதிபர் புடின், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார்.

அருகருகே நின்ற மோடி, ஜின்பிங்: கடந்த 2020ம் ஆண்டில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, முதன்முறையாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்குடன் ஒரே மேடையில் மோடி பங்கேற்றார். அதேபோல், உக்ரைனில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் புடினை மோடி நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா தலைமை* உஸ்பெகிஸ்தான் சமர்கண்டில் 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடந்து முடிந்துள்ளது.

அடுத்தாண்டு இந்த அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இந்தியாவில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது.* அடுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. மாநாட்டுக்கு தலைமை ஏற்க உள்ள இந்தியாவுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE