பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் செயல்படும் ஜின்னா முதுகலை மருத்துவமனையில் கலாபுலில் வசிக்கும் ஹினா ஜாஹித் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் சுகப்பிரசவத்தின் மூலமாக பிறந்தது. ஆனால் அதில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் கூறுகையில், ‘ஹினாவுக்கு நார்மல் டெலிவரி ஆனது. 4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன.
அவற்றில் பெண் குழந்தை ஒன்று இறந்துவிட்டது. மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த ஹினாவை அவரது குடும்பத்தினர் பாராட்டி வருகின்றனர்.
அதேநேரம் ஒரு குழந்தை இறந்ததால் கவலையும் அடைந்துள்ளனர். ஹினாவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவதாக கர்ப்பமாகி 6 குழந்தைகளை பெற்ற ஹினாவுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆகஸ்டில், சிந்துவின் ஷிகர்பூரில் ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்’ என்று கூறினார்.