எஃப்-16 போர் விமானங்களை கூடுதலாக மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்க முன் வந்ததற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கிய சக்தி வாய்ந்த எஃப்-16 போர் விமானங்களை மேலும் மேற்படுத்த ரூ.3,500 நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தீவிரவாதத்தை காரணம் காட்டி பாகிஸ்தானிடம் பாரா முகாம் காட்டி வந்த அமெரிக்கா திடீரென நெருக்கம் காட்டுவது ஆசிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் மீது போர்தொடுத்த ரஷ்யா உடன் நட்புறவை துண்டிக்க மறுத்ததால் இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கவே அமெரிக்கா இதுபோன்ற எதிர் அரசியலை கையில் எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உக்ரைன் மீது போர்தொடுத்த ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என அமெரிக்கா எதிர்பார்த்தது.
ஆனால் உக்ரைன் மீதான போரை விமர்சித்தாலும், ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச தளங்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை இந்தியா ஆதரிக்க வில்லை. மேலும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளையும் மீறி ரஷ்யாவிடம் எரிபொருட்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதிகின்றனர்