சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலரான ஷீ ஜிங்பிங், அதிபர், சீன ராணுவத்தின் தலைவர் ஆகிய பதவிகளிலும் உள்ளார்.இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த மாதம் பீஜிங்கில் நடக்கவுள்ளது.
இதில், கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும், 25 உறுப்பினர்கள் அடங்கிய பொலிட் பீரோ கூட்டமும் நடக்கவுள்ளது. இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:நுாற்றாண்டு பழமையான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இதுவரை மாவோ மட்டுமே தலைவர் என்ற பொறுப்பை வகித்துள்ளார். அவருக்குப் பின் வந்தவர்கள், பொதுச் செயலர் பொறுப்பை வகித்தனர். தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பொறுப்பு ஜிங்பிங்கிற்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக கட்சியின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜிங்பிங்கின் அதிபர் பதவிக் காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. எனவே, அவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிபர் பதவியை வகிக்கும் வகையிலும் சட்டத்தில் திருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.