
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், கலாநிதி காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோரே ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவலையடைவதாக காவிந்த எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை, நாளையதினம் (12) ஆரம்பமாகவுள்ள பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு ஏற்கெனவே ஜெனீவா சென்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஜயம் செய்துள்ளதுடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸை இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.