“பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது முக்கியம்; கூட்டணி கட்சிகளின் தலைமையை பிறகு முடிவு செய்து கொள்ளலாம்,” என, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
வரும் 2024ல் லோக்சபாவுக்கு நடக்கவுள்ள தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக இணைந்து களம் இறங்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். தலைநகர் டில்லியில் தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி தலைவர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின் நிதிஷ்குமார் கூறியதாவது:
மக்களைப் பற்றி பா.ஜ., கவலைப்படவில்லை. மத்தியில் இருந்து பா.ஜ.,வை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து களம் இறங்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் முதலில் ஒருங்கிணைவதுதான் முக்கியம். கூட்டணிக்கான தலைமை யார் என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். காங்., தலைவர் சோனியா வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் அவரை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.