கனடாவில் அடுத்தடுத்து 2 இளைஞர்கள் நிகழ்த்திய கத்திக்குத்து தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஸ்காட்செவன் மாகாணத்தின் தலைநகர் ரெஜினாவில் நேற்று பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பொதுமக்கள் கத்தியால் குத்தப்பட்டனர்.
ஜேம்ஸ் ஸ்மித் சீர்நேஷன் வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் 2 பேர், கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக குத்தியாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நிகழ்விடங்களுக்கு சென்ற காவலர்கள், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 25 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே 10 பேர் உயிரிழந்துவிட்டனர். படுகாயமடைந்துள்ள 15 பேருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவரை கனடா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ரெஜினா நகரில் கால்பந்து லீக் போட்டி நடைபெற்று வருவதால் தாக்குதலுக்கு விளையாட்டு முடிவுகள் ஏதேனும் காரணமா? என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கனடாவில் அடுத்தடுத்து கத்திக்குத்து நடத்தப்பட்டு 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொலைகளுக்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் டிரூடோ உறுதி அளித்துள்ளார்.
கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.