
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் தரை தட்டிய சரக்கு கப்பல் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சரக்கு கப்பலான அபினிட்டி வி உலகின் முக்கிய நீர்வழி தளங்களில் ஒன்றான சூயஸ் கால்வாய் வழியாக சென்றது.
கால்வாயின் 143வது கிலோ மீட்டரில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கரையோரம் தரை தட்டி நின்றுவிட்டது. இதனால் உலகின் 12விழுக்காடு கடல்வழி வார்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
இதனை தொடர்ந்து மீட்பு பணியில் 5க்கும் மேற்பட்ட கனரக இழுவை கப்பல்கள் களமிறக்கப்பட்டன. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தரைதட்டிய கப்பல் மீண்டும் கரையில் இருந்து நகர்த்தப்பட்டு நீரில் மிதக்கவைக்கப்பட்டது.
சுமார் 64 ஆயிரம் டன் எடையுள்ள அபினிட்டி வி சரக்கு கப்பல் 825 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டதாகும். சரக்கு கப்பல் அகற்றப்பட்ட பிறகு சூயஸ் கால்வாயில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. சரக்கு கப்பல் தரை தட்டியதற்கு திசை மாற்றி கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.