இங்கிலாந்தின் புதிய பிரதமரை ராணி 2ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் இருந்து விரைவில் அறிவிப்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், ஒவ்வொரு கட்டத்திலும் படிப்படியாக குறைந்து தற்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மட்டும் இறுதிப் போட்டி தேர்வில் உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் இறுதி போட்டி வரும் திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் லிஸ் டிரஸ் அல்லது ரிஷி சுனக் ஆகிய இருவரில் ஒருவரை இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் புதிய பிரதமராக வரும் செவ்வாய்கிழமை அறிவிப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல் நலக் குறைவினால் பயணம் செய்யக் கூடாது என்பதால், 96 ஆண்டு பாரம்பரியத்தை மீறி ஸ்காட்லாந்தில் இருந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.