இந்தியாவில் இருந்து, எங்கள் எல்லைக்குள் செலுத்தப்பட்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதல்ல. இதில், கூட்டு விசாரணை நடத்த வேண்டும்’ என, பாகிஸ்தான் கூறியுள்ளது.
ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து, மார்ச் 9ம் தேதி, பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. இது, 124 கி.மீ., துாரம் பயணித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விழுந்தது. இது தொடர்பாக, பாக்., புகார் கூறியது. ‘இது தவறுதலாக நடந்த விபத்து’ என, இந்தியா பதிலளித்தது.இச்சம்பவம் தொடர்பாக, ராணுவம் விசாரணை நடத்தியது. விமானப் படையின் மூன்று உயரதிகாரிகள் பணியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர்.
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது, இந்த பிராந்தியத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதே நேரத்தில், இதில் பாகிஸ்தான் பொறுப்புள்ள நாடாக அமைதி காத்தது. பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய விமானப் படை விசாரணை நடத்தி, மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதன் வாயிலாக, இது மனிதத் தவறு என்பதை காட்ட முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியாவின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை; திருப்தி அளிப்பதாகவும் இல்லை. எனவே, இந்தியா கூட்டு விசாரணைக்கு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.