ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரின் மகள், நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியானார்.
ரஷ்ய அதிபர் புடினின் மூளையாக செயல்படுபவர், அலெக்சாண்டர் டுகின். போர், அரசியல் போன்ற அனைத்து விஷயங்களிலும் புடினுக்கு ஆலோசனைகளை கூறுபவர், இவர்.தற்போது நடக்கும் உக்ரைன் போர், ஏற்கனவே நடந்த கிரீமியா போர் ஆகியவை அலெக்சாண்டரின் மூளையில் உதித்த யோசனைகள் தான். இவரது யோசனைகளைத் தான், புடின் செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அலெக்சாண்டரின் மகள் டரியா டுகினா, 29, மாஸ்கோ புறநகர் பகுதியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த கார், தீப்பிடித்து எரிந்தது. டரியா டுகினா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரஷ்யாவில் செயல்படும் சில பயங்கரவாத அமைப்புகள், அலெக்சாண்டருக்கு வைத்த குறியில், அவரது மகள் உயிரிழந்து விட்டதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி முடிந்து, தந்தையும், மகளும் ஒரே காரில் திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அலெக்சாண்டர் வேறு காரில் ஏறியதாகவும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.