இலங்கை விமானியின் சாதுரியமான நடவடிக்கையால், நடுவானில் ஏற்பட இருந்த பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனிலிருந்து, நம் அண்டை நாடான இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் 275 பயணியர் இருந்தனர்.
இந்த விமானம், துருக்கி வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பறக்கும் உயரத்தை 33 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 35 ஆயிரம் அடியாக அதிகரிக்க அங்காரா தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து தகவல் வந்தது.
அந்த சமயத்தில், 15 மைல் துாரத்தில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருப்பதை இலங்கை விமானி அறிந்தார்.இதையடுத்து, இலங்கை விமானி, விமானத்தை மேலே உயர்த்த மறுத்து விட்டார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவல்படி, இலங்கை விமானி 35 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை உயர்த்தியிருந்தால், வேகமாக வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் நடுவானில் மோதி இரண்டுமே சிதறியிருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி சாமர்த்தியமாக அந்த விபத்தை தவிர்த்தார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.