அம்பாறையில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ரஹ்மானியாபாத் பகுதியில் கடந்த 23-05.2022 இரவு கடற்கரைப்பகுதிக்கு சென்று வீடு திரும்பிய 11 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள இரண்டு நபர்களால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன் இச்சம்பவத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம் றிபாஸ்தீன் தனது முகநூலின் ஊடாக வெளிப்படுத்தி சிறுமிக்கான நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (31-05-2022) அன்று அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்த விசேட தேடுதலில் குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 18 – 19 வயதினை உடைய சிறுமியின் உறவு முறைக்காரர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் கைதான இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அக்கரைப்பற்று பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.