மலையகத்தின் பல இடங்களில் மண்சரிவு

மத்திய மலை நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.

நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (11) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.

குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் , ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.

மண்சரிவு ஏற்படும் போது குறித்த கட்டிடத்தினுள் எவரும் இல்லாததன் காரணமாக உயர்ச்சேதம் ஏற்படவில்லை.

இதே நேரம் நோட்டன் தியகல பிரதான வீதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன .

இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

இதே நேரம் ஹட்டன் காசல்ரி ஊடான நோட்டன் வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனாலும் பல இடங்களில் மண்சரிவு அவதானம் காணப்படுவதனாலும் இவ்வீதிகளை பயன்படுத்தும் போது வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE