ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. மைக்கலேவ் பகுதியில் உள்ள விமான உபகரணங்கள் மற்றும் எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்களை சிறை பிடித்துள்ள ரஷ்ய ராணுவத்தினர், மிடுக்கான ராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தன்ஸ்க் நகரில் எரிபொருள் கிடங்கை உக்ரைன் ராணுவத்தினர் ஏவுகணை வீசி தாக்கினர். இதில் எண்ணெய் கிடங்கு தீ பற்றி எரிந்தது. இதனிடையே உக்ரைனுக்கு எதிரான போரை வழிநடத்தும் ரஷ்யாவின் ராணுவ அதிகாரிகளை கொள்ள உக்ரைன் ராணுவத்தினருக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படைகளின் இருப்பிடம், ராணுவ தலைமையகம் உள்ளிட்ட விவரங்களை உக்ரைன் ராணுவத்தினருக்கு அமெரிக்கா அளித்ததாகவும் அந்நாட்டு மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.