‘அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்வோம்,’ என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வரும் 10ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது போன்ற விடுதலை பிரச்னையில் பேரறிவாளன் ஏன் இடையில் சிக்க வேண்டும்.
ஒரு வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை ஏன் விடுதலை செய்து, அதுதொடர்பான வழக்கை ஏன் முடித்து வைக்கக் கூடாது? இந்த விவகாரத்தில் பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா? அல்லது நாங்கள் செய்யட்டுமா?’ என ஒன்றிய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.என்.நட்ராஜ், ‘பேரறிவாளன் விடுதலையை பொருத்தமட்டில், அது தொடர்பாக முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் ஆளுநருக்குதான் இருக்கிறது,’ என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘இது மாநில அரசின் உரிமையாகும். அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்துக்கு ஆளுநர் முழுமையாக கட்டுப்பட்டவர். அதுதான் சட்ட விதிமுறைகளாகும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகள் இதை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அதனால், ஒன்றிய அரசின் வாதங்களை இந்த விவகாரத்தில் ஏற்க முடியாது,’ என காட்டமாக தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘இந்த பிரச்னை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்து விட்டார். இதை நிராகரிப்பது அல்லது மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைப்பது உட்பட 3 வாய்ப்புகள் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதனை அவர் சட்டத்துக்கு உட்பட்டு செய்வார்,’ என தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், “ஆளுநர் இந்த விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததே தவறு என்பதுதான் எங்களின் முக்கிய வாதமாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநரை ஒன்றிய அரசு கைவசம் வைத்துக்கொண்டு, இந்த விவகாரத்தில் தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.
அதனால், ஜனாதிபதியின் முடிவு குறித்த வாதங்களை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் முன்வைப்பதை ஏற்க முடியாது,’ என தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி, ‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மாநில ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும், அவருக்கான அதிகாரம் என்ன என்பது குறித்த விரிவான எழுத்துப்பூர்வ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்,’ என தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் இனிமேல் வாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஒன்றிய அரசு தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தயாராக உள்ளது. அதற்கான உத்தரவையும் பிறப்பிப்போம்.
இருப்பினும், ஒன்றிய அரசின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். மேலும், இந்த விவகாரத்தை இந்திய அரசியல் சாசனம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்துவத்திற்கு உட்பட்ட மிக முக்கியமான வழக்காக நீதிமன்றம் கருதுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கக் கூடிய பேரறிவாளன் இந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் பார்க்காமல் தனது விடுதலைக்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்கிறார்.
இதில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களின் வழக்கின் மீது சரியான நகர்வுகள் இல்லாமல் இருந்தால், உச்ச நீதிமன்றமே அவர்களின் விடுதலை விவகாரத்தில் இதற்கு முன் முடிவுகள் எடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஏன் இந்த விவகாரத்தையும் நாங்கள் அணுகக் கூடாது,’ என கேட்டனர். அப்போது ஒன்றிய அரசு வழக்கறிஞர், ஆளுநரின் அதிகாரம் குறித்து விளக்குவதாக தெரிவித்தார்.
ஆனால், அதனை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கை நாங்கள் வரும் செவ்வாய்க்கிழமை அதாவது 10ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் தமிழக அரசின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் விரிவான அறிக்கையாக ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு உட்பட்டும், உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையிலும் நாங்களே இறுதி முடிவை எடுத்து உத்தரவு பிறப்பிப்போம். மேலும், ஜனாதிபதியோ அல்லது ஆளுநரோ யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள்தான்,’ என தெரிவித்து, வழக்கை வரும் 10ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.