சீனாவின் ஷாங்காயில், கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் பெற்றோரும் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 ஆயிரம் பேர், ஷாங்காய் நகரை சேர்ந்தவர்கள். இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஷாங்காய் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இங்கு, மக்களுக்கு பரிசோதனை செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் உட்பட அனைவரும், தனிமை முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இந்தக் குழந்தைகளுடன் பெற்றோர் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, தனிமை முகாமில் உள்ள குழந்தைகளுடன் அவர்களின் பெற்றோரும் உடனிருக்க, அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, ‘ஷாங்காய் மக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கும் வரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்கப்படாது’ என, ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.