ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் சென்ற போது நேரிட்ட விபத்தில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்ரிக்கன் நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய அவர்கள் கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. அவ்வாறு 100க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக சென்ற படகு ஒன்று எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கிக் கொண்டது.
4 நாட்கள் நடுக்கடலில் சிக்கி தவித்த அவர்கள், ஒரு கட்டத்தில் பீதியில் தப்ப முயன்ற போது, கப்பல் கவிழ்ந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் கடல் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் ஒரு சிலரை மட்டும் மீட்டதாக கூறப்படுகிறது.
உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை ஏற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், தங்களை ஏன் ஏற்றிக் கொள்ள கூடாது என்று உயிர் தப்பிய சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். ஆப்ரிக்கன் நாடுகளில் இருந்து வருவோரை தடுக்க கடும் கண்காணிப்புகளை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றி வருகின்றன.