உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தும் சில துல்லிய ஏவுகணைகளில் 60 சதவிகிதம் அளவிற்கு தோல்வியடைவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் மிகச் சிறிய ஆயுதப் படைகளுக்கு எதிராக ரஷ்யாவின் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருந்த போதிலும் ஒரு மாதமாக ரஷ்யா அதன் நோக்கங்களை அடைய முடியவில்லை. இந்த சூழலில் தான் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தாங்கள் அறிந்த தகவல்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்களிடம் பகிர்ந்துகொண்டனர். அதில் ரஷ்யாவின் சில துல்லிய ஏவுகணைகளின் தோல்வி விகிதம் அதிகம் இருப்பதால் தான் உக்ரைனின் விமானப் படையை வலுவிழக்கச் செய்ய முடியவில்லை என்கின்றனர்.
ஏவுகணைகளின் 60 சதவிகித தோல்வி விகிதத்தில் வெடிக்கத் தவறுவது மற்றும் இலக்கை தவறவிடுவது ஆகியவை அடங்கும். போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா 1,100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது. ரஷ்ய ஏவுகணையின் தோல்வி விகிதம் நாளுக்கு நாள் மாறுபடும். வான்வழி ஏவுகணைகள் 20 முதல் 60 சதவிகிதம் தோல்வியை தழுவுவதாக கூறினர். இது குறித்து இதுவரை ரஷ்யா விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.