தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளுக்கு ம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
கூட்டத்தில் ஜனாதிபதியுடன் சம்பந்தன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் – 13வது திருத்தத்தையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் தனிவழியில் செல்வோம் என மேசையில் அடித்து கூறினார் இரா.சம்பந்தன்.
சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த கலந்துரையாடலில் – ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சமல் ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் அரச தரப்பில் பேச்சில் கலந்து கொண்டனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இராசபுத்திரன் சாணக்கியன், தவராசா கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழர்களின் இனப்பிரச்சனை வரலாற்றை சுருக்கமாக குறிப்பிட்டு, அரசுகள் ஏமாற்றி வரும் வரலாற்றை தெரிவித்தார்.
இரு தரப்பு கருத்து பகிர்வின் பின்னர், அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கை வெளியான பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை உத்தேசிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விபரத்தை கூட்டமைப்பு தூதுக்குழு சுட்டிக்காட்டியது. கூட்டமைப்பினரிடம் நேற்று அரசியல் கைதிகள் விபரம் உறவினர்களால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த விபரத்தின் அடிப்படையில் 48 அரசியல் கைதிகள் 10 வருடங்களிற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், இன்னும் பலர் வழக்கு தொடரப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.
வழக்கு தொடரப்பட்ட 48 தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை ஆராய்ந்து, சாதகமான முடிவொன்றை விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், வழக்கு தொடரப்படாமல் உள்ள அரசியல் கைதிகள் விடயத்தை நீதியமைச்சர் அலி சப்ரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூடி ஆராய்வதென்றும், ஒவ்வொருவரின் வழக்கையும் ஆராய்ந்து, அது தொடர்பாக அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் கூட்டமைப்பினர் விலாவாரியாக எடுத்துரைத்தனர். இராணுவம் ஒரு பக்கமாகவும், தொல்லியல் திணைக்களம் ஒரு பக்கமாகவும், வனவள திணைக்களம் ஒரு பக்கமாகவும் காணி அபகரிப்பை செய்கிறார்கள், வயல் நிலங்கள், வணக்கஸ்தலங்கள், குடியிருப்புக்கள் என பல இடங்களுக்குள் மக்கள் நுழைய தடைவிதிப்பதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் காணி சுவீகரிக்கிறார்களா? அவர்களிற்கு எதற்கு காணி என ஜனாதிபதி ஆச்சரியமாக கேள்வியெழுப்பியுள்ளார். வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்தனர்.
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சகலவிதமான காணி சுவீகரிப்பையும் நிறுத்த உத்தரவிடுமாறும், இது விடயமாக கூட்டமைப்புடன் கலந்துரையாடல் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு கோரியுள்ளது.
உடனடியாக, அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
கலந்துரையாடலின் ஒரு கட்டத்தில், 13வது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன, ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, ஆகவே எமக்கும் அந்த சிக்கல் இருக்குமென அமைச்சர்கள் ஜீ.எஸ்.பீரிஸ், அலி சப்ரி கருத்து தெரிவித்தனர்.
இதனால் கோபமடைந்த இரா.சம்பந்தன், மேசையில் ஓங்கி அறைந்து, 13வது திருத்தத்தை கூட முழுமையாக அமுல் படுத்த முடியாவிட்டால், நாங்கள் ஏன் பேச வேண்டும். நாம் எமது வழியில் தனிவழியில் செல்வோம் என கோபமாக கூறினார்.
உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கினார். அதை அமுல் படுத்த முடியாதென நாம் சொல்லவில்லை. அதிலுள்ள சில சவால்களையே குறிப்பிட்டோம். நாம் முழுமையான அதிகார பகிர்விற்கு அனைத்து முயற்சிகளும் செய்வோம் என்றார்.
எனது அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த கலந்துரையாடலிற்கு வந்தது மகிழ்ச்சி. உங்களிற்கு உள்ள அரசியல் பாதையில் நீங்கள் பயணியுங்கள். ஆனால், நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதில் இணைந்து பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். இணைந்து பணியாற்றவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், அதற்கு முன்னர் அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இந்த நாட்டில் சம அந்தஸ்துள்ள பிரஜைகளாக, சகல உரித்துக்களுடனும் வாழும் நிரந்தர தீர்வு எட்டப்பட்டால் இணைந்து பணியாற்ற தயராக இருக்கிறோம் என இரா.சம்பந்தன் பதிலளித்தார்.
அதற்கான முழு முயற்சியும் தான்எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இரு தரப்பும் மீண்டும் சந்தித்து பேசுவதென்ற இணக்கப்பாட்டுடன் கூட்டம் முடிவடைந்தது. ரெலோ இந்த கூட்டத்தை புறக்கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .