உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் விலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த ஒரு மாத காலமாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைன் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது.
போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை அந்நாட்டின் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஜெலன்ஸ்கி பேசியதாவது – இந்த நாளில் இருந்து உலக மக்கள் உங்கள் நிலைபாட்டை தெரிவியுங்கள். உக்ரைன் நாட்டையும், சுதந்திரத்தையும் ஆதரிக்க உங்கள் அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், வீடுகளிலிருந்து அனைத்து மக்களும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். போரை நிறுத்த வலியுறுத்த அனைத்து உலக மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரியுள்ளார்.