ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பயிண்டா அமெரிக்காவில் தனியார் வாடகை டாக்ஸி ஓட்டும் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்கு முன்பாக அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக காலித் பயிண்டா செயல்பட்டு வந்தார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நாட்டை கைப்பற்றியதும், அவர்களுக்கு பயந்து அரசு நிர்வாகத்தில் இருந்தவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். அதில் காலித் பயிண்டாவும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார். ஒரு நாட்டின் நிதியமைச்சராக இருந்த அவர், அங்கு தன் அன்றாட செலவினங்களுக்காக டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எனது குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டேன். நாங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஆப்கானிஸ்தான் சீட்டுக்கட்டு சரிந்ததைப் போன்று தலிபான்களிடம் வீழ்ந்து விட்டது. 6 மணி நேரம் கார் ஓட்டி 150 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம்) சம்பாதித்தேன். அமெரிக்காவில் நானும் எனது குடும்பத்தினரும் ஒன்றாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.