மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபரான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட், இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அறுவை சிகிச்சை செய்த வைத்தியசாலை நேற்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் 57 வயதான பென்னட் செவ்வாய்க்கிழமை இறந்தார், மேலும் இறப்புக்கான சரியான காரணத்தையும் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.
பென்னட், மனித இதயத்திற்குத் தகுதி பெற முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் அவருக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம் பொருத்தும் “இரக்கமுள்ள நோய்த்தடுப்பு சிகிச்சை” கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக ஜெனோ-ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்று அழைக்கப்படும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பயன்படுத்த மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதில் கலவையான வெற்றியையும் பெற்றுள்ளனர்.
1984ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு பெண் குழந்தையின் இதயத்துக்கு ஒரு பபூன் குரங்கின் இதயத்தை பொருத்திக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் 21 நாட்களுக்குப் பிறகு அந்த பெண் இறந்தார்.
இத்தகைய சிகிச்சைகள் மிகவும் ஆபத்தானவை என்றாலும், நோயாளிகள் அந்த ஆபத்தை உணர்ந்திருந்தால் தாங்கள் இன்னும் அந்த பரிசோதனை சிகிச்சையில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று விரும்புவோம் என சில மருத்துவ நெறிமுறை மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.