சர்வதேசப் பெண்கள் தினம்

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.

1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகள் கொண்டாடி வருகிறது.

1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.

இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 108-வது பெண்கள் தினம். எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம் “சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி” என்பதாகும்.

உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள். சமூகம், அரசியல், பொருளியல் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது. ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன. கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம், “அமைதியும் ரொட்டியும்“தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் திகதி பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது. நான்கு நாள்கள் நீடித்த இந்தப் போராட்டம் கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது. முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது. இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷ்ய புரட்சிக்கும், அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE