உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் -அதிபர் புடினின் நேரடி பார்வையில் இன்று பயிற்சி

உக்ரைன் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இன்று மிகப்பிரமாண்ட அளவிலான அணு ஆயுத பயிற்சியை நடத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதிபர் புடினின் நேரடி பார்வையில் போர் பயிற்சி நடக்க இருப்பதால் ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, அந்நாட்டின் எல்லையில் படைகளை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் தங்களின் படைகளை அனுப்பி உள்ளன. இதன் காரணமாக.

3ம் உலகப் போர் மூளும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிரச்னையை தீர்க்க வேண்டுமெனில், நேட்டோவிலிருந்து உக்ரைனை விலக்கி வைக்க வேண்டும், அந்நாட்டில் இருந்து மேற்கத்திய நாடுகள் படைகளை வாபஸ் பெற வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி உள்ளது. அதுவரை தனது பாதுகாப்புக்காக எல்லையில் படைகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறி உள்ளது.

தற்போதைய நிலையில், உக்ரைன் எல்லையை சுற்றி வளைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரஷ்ய வீரர்கள், பயங்கர ஆயுதங்கள் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவிக்கின்றன. அதாவது, ரஷ்யா தனது படையில் 60 சதவீதத்தை உக்ரைனை நோக்கி திசை திருப்பி இருக்கிறது. அந்நிய படைகளின் அச்சுறுத்தல் நிலவினால், பாதுகாப்பிற்காக தங்கள் எல்லையில் அணு ஆயுதங்கள் நிறுத்தப்படும் என ரஷ்யாவின் ஆதரவு அண்டை நாடான பெலாரஸ் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக இந்த மோதல் அணு ஆயுத போராக மாறுமோ என்ற புதிய அச்சம் நிலவி வருகிறது.இந்நிலையில், தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இன்று பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக ரஷ்யா கூறி உள்ளது. இந்த பயிற்சியில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

இப்பயிற்சியை ரஷ்ய அதிபர் புடின் நேரில் பார்வையிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2014ல் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியன் பகுதியிலும், கருங்கடலிலும் ரஷ்ய போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. போர் சூழலுக்கு மத்தியில் இதுபோன்ற அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்துவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.இந்திய மாணவர்களை அழைத்து வர முன்பதிவுஉக்ரைனில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்டு வர ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும் 22, 24, 26 ஆகிய தேதிகளில் 3 விமானங்களை இயக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இந்த விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவுகள் நேற்று தொடங்கின.  யார் பக்கம் இந்தியாரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா தூதர் திருமூர்த்தி, ‘‘பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு பிரச்னை பற்றி பேசி தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்து பதற்றத்தை தணிக்க வேண்டும்’’ என்றார். இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் டிவிட்டரில், ‘இந்தியாவின் சமநிலையான, சுதந்திரமான அணுகுமுறையை ரஷ்யா வரவேற்கிறது’ என கூறப்பட்டுள்ளது. அதே சமயம், உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எங்கள் பக்கம் தான் நிற்கும் என அமெரிக்கா கூறி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இரு நாட்டுடனும் நெருக்கமான உறவை பராமரித்து வரும் இந்தியா, உக்ரைன் விவகாரத்தில் யார் பக்கம் நிற்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.ரஷ்யா-உக்ரைன் மோதலால் கடந்த சில நாட்களாக உலக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன.

ஆனால், ரஷ்யா தனது படைகளை வாபஸ் பெற்றதாக வெளியான தகவலால் பங்குச்சந்தைகள் மீண்டும் எழுச்சி கண்டன. இதற்கிடையே, போர் பதற்றம் இன்னமும் தணியாததால் நேற்று மீண்டும் ஆசிய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE