ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என்றும் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன், சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் பல சதித்திட்டங்களை வகுக்கின்றன என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு இன்று (18) திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வலுச்சக்தி அதிகார சபையின் முகாமைத்துவம், ஆராய்ச்சி, மூலோபாயத் திட்டம், வலுச்சக்தி முகாமைத்துவம் போன்ற பிரிவுகளுக்குச் சென்ற ஜனாதிபதி, அவற்றின் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், இந்நாட்டின் மின்சாரத் துறையில் காணப்படும் தடைகளைத் தகர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி, ஒரு இலட்சம் வீட்டுக் கூரைகள் மீது சூரியசக்திப் படலங்களைப் பொருத்தும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்தி, அதன் பயனைக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.