உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலியாகுபவர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதன் காரணமாக தற்போது உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை என்றும் உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் கூறுகையில் உலகிலுள்ள 193 நாடுகளில் சில நாடுகள் வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்கி விட்டதாக நினைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி விடுகின்றன, பின்னர் திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன.அதே சமயத்தில் இதற்கு நேர் மாறாக சில நாடுகள் வைரஸ் தாக்கத்தின் அளவை பொருத்து படிப்படியாகவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இந்த முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் , அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வைரஸ் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை கணித்து அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.