பம்பலபிட்டி பகுதியிலுள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாடசாலை வளாகத்தில் இன்று காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு குழுக்களாக பிளவுப்பட்டு, இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
பாடசாலை மாணவி பாடசாலை வளாகத்திற்கு வெளியிலேயே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் இடம்பெறுவதாகவும் ஒரு சில பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு போராட்டம் நடத்தாத பெற்றோர், இன்று அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம், பாடசாலை வளாகத்திற்கு வெளியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பாடசாலை மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உரிய தரப்பினர் அதிபருடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அதிபர் அதற்கு சரியான பதிலை வழங்கவில்லை என மற்றுமொரு தரப்பு பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு வழி இல்லாமையினால், இந்த போராட்டத்தை நடத்தி வருவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த பாடசாலையில் கடமையாற்றும் ஒருவரே, இந்த துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், பாடசாலை மாணவி, பாடசாலை நேரத்திலேயே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
இந்த பாடசாலையில் இவ்வாறான சம்பவமொன்று இனி இடம்பெறாது என்பதனை உறுதிப்படுத்தி தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்