
கொழும்பு துறைமுக நகரத்தில் மெரினா நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் மற்றும் படப்பிடிப்புக்களை நடத்தும் அனுமதிக்கான முறைமை மற்றும் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியான புகைப்பட பிடிப்பு அல்லது வீடியோ பதிவுகளுக்கான கட்டண முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனிநபர் பிரிவுக்கமைய 2முதல் 5 வரையான நபர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவும், 6 முதல் 10 வரையான நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தருபவர்கள் அதனை சூழவுள்ள கடற்பகுதியில் கழிவுகளை கொட்டினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
துறைமுக நகரை சூழவுள்ள கடற்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் போர்ட் சிட்டி நிறுவனத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, தெரிவித்தார்.