அமெரிக்காவில் ‘5ஜி’ அலைபேசி சேவையால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவைகள், திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளுக்குச் செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பயணியர், கடும் சிரமத்திற்கு ஆளாயினர்.
அமெரிக்காவில் ஏ.டி., அண்டு டி மற்றும் வெரிசான் நிறுவனங்கள், ‘5ஜி’ தொழில்நுட்பத்தில் அதிவேக அலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் தடையற்ற, மேம்பட்ட தொலைதொடர்பு வசதிக்கு ‘சி-பேண்டு’ அலைவரிசை வாயிலான 5ஜி சேவையை, ஜன.,19ல் துவக்க உள்ளதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், புதிய 5ஜி சேவையால் நியூயார்க் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அமெரிக்க விமான சேவை ஆணையம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது.
இதன் காரணமாக, ஏர் இந்தியா, டெல்டா உள்ளிட்ட விமான நிறுவனங்கள், திடீரென சில நகரங்களில் விமான சேவைகளை ரத்து செய்தன. இதனால் நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியாவுக்கு வர இருந்த ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டனர்.
‘விமான சேவை ரத்து பற்றி விமான நிறுவனங்கள் பயணியருக்கு முன்னதாக தெரிவித்திருக்க வேண்டும்’ என பலர் குமுறினர்.இதற்கிடையே, குறிப்பிட்ட விமான நிலையங்களை சுற்றியுள்ள தொலைதொடர்பு கோபுரங்களில் புதிய 5ஜி சி-பேண்டு சேவை துவக்குவதை தள்ளி வைத்துள்ளதாக, ஏ.டி., அண்டு டி, வெரிசான் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.