உக்ரைனில் அரசு இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டதாக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘நேட்டோ’ நாடுகளின் கூட்டமைப்பில் இணைய, ஐரோப்பிய நாடான உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.அதன் அண்டை நாடான ரஷ்யா, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை, உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக இருப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் 70க்கும் மேற்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள், மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், உக்ரைன் அரசு நிறுவனங்களில் உள்ள பல கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன.இதை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியது. ஒரு மென்பொருள் வாயிலாக ஊடுருவி, உக்ரைன் அரசு இணையதளங்களை சிலர் முடக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.