குளிர்கால சுற்றுலாவை தக்கவைத்துக்கொள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம் கடுமையான பயண கட்டுப்பாடுகளைக் கைவிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 26 மற்றும் 27-ஆம் திகதிகளில், Omicron வகை வைரஸின் மீதான அச்சத்தின் காரணமாக, சுவிஸ் அரசு பல நாடுகளில் இருந்து – பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா பகுதியிலிருந்த நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை அறிவித்தது.
அவ்வாறு நாட்டிற்கு வருபவர்களுக்கு 10-நாள் தனிமைப்படுத்தலை சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தியது எனினும், டிசம்பர் 4-ஆம் திகதி, அனைத்து பயணிகளுக்கும், சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
அறிவித்த கோவிட் கட்டுப்பாடுகளை மீண்டும் நீக்கிய முதல் நாடாக சுவிட்சர்லாந்து மாறியது.
அதற்கு பதிலாக, சுவிட்சர்லாந்து அரசு கோவிட் சான்றிதழ் தேவையை விரிவுபடுத்துகிறது, ஆன்டிஜென் சோதனைகளுக்கான செல்லுபடியாகும் காலத்தை குறைத்து, முகக்கவசம் அணிவதில் பரந்த கட்டாய விதிகளை அமுல்படுத்துகிறது.
அதன்படி, அனைத்து பயணிகளும் பயணத்திற்கு முன் PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும், அதே போல் இரண்டாவது PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனையை நான்காவது மற்றும் ஏழாவது நாளுக்கு இடையில் எடுக்வேண்டும். மேலும், அந்த சோதனைகளுக்காக பயணிகள் தங்கள் சொந்த பணத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு தனிப்படுத்தல் விதிகளை ரத்து செய்து, கோவிட் சோதனைகள், மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை நம்பியதற்கு முக்கிய காரணம் இந்த குளிர்கால சுற்றுலாவைக் காப்பாற்றிக்கொள்வது தான்.
சுவிட்சர்லாந்து அதன் கோவிட் நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன, மேலும் மருத்துவமனைகள் அதிக சுமையை சந்திக்கின்றன மற்றும் பணியாளர்கள் குறைவாக உள்ளனர்.
மிகப்பெரிய மண்டலமான சூரிச்சில் ICU படுக்கைகள் எதுவும் காலியாக இல்லை.
இருப்பினும், சசுவிட்சர்லாந்தில் இது பனிச்சறுக்கு போட்டிகள் நிகழும் காலம் என்பதால், குளிர்கால சுற்றுலாவை நம்பி இந்த பயணக் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.
ஏனெனில், சுவிட்சர்லாந்தின் பிரபலமான ஸ்கை ரிசார்ட்டான Zermatt, கட்டாய தனிமைப்படுத்தல் தேவையை ஆரம்பித்தபோது, 48 மணி நேரத்தில் முன்பதிவு 50% சரிந்ததாக செய்தித் தொடர்பாளர் சப்ரினா மார்கோலின் தெரிவித்தார்.
பிரித்தானியா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல பயண ஆபரேட்டர்கள் சுவிட்சர்லாந்திற்கு கிறிஸ்துமஸ் பயணங்களை பெருமளவில் ரத்து செய்ததாக அறிவித்தனர்.
குளிர்கால சுற்றுலா சுவிட்சர்லாந்தில் 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டுகிறது.
இந்தநிலையில், சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிகங்கள், பனிச்சறுக்கு விடுதிகள் முதல் உணவகங்கள் வரை, தனிமைப்படுத்தல் விதிகளை நீக்கியத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர்.