எதிர்காலத்தில் வரும் பெருந்தொற்றானது ஆபத்து மிகுந்ததாக இருக்கும் எனவும், தற்போது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மட்டுமே நம்மை காப்பாற்றும் என தடுப்பூசி தயாரிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.
உலக நாடுகளை மொத்தமாக உலுக்கியுள்ள கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 5.26 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பேரிடியாக டிரில்லியன் கணக்கிலான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், பில்லியன் கணக்கிலான மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் Sarah Gilbert தெரிவிக்கையில், உண்மையில் எதிர்வரும் காலத்தில் வரும் பெருந்தொற்றானது மிக ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
நமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதரத்தை மொத்தமாக உலுக்கியுள்ள கடைசி பெருந்தொற்று கொரோனா அல்ல என்பதையும், அடுத்த பெருந்தொற்று எப்போது வேண்டுமானாலும் கண்டறியக்கூடும் என்கிறார் அவர்.
உலக மக்கள் கட்டாயம் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் மேற்கொண்ட அறிவியல் முன்னேற்றங்களை, நமக்குக் கிடைத்த அறிவை நாம் தொலைத்துவிடக் கூடாது.
கொரோனா தடுப்பூசி, குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சென்றடையவில்லை என்பதும் வளமான நாடுகள் பூஸ்டர் டோஸ்களைப் போட்டு வருகின்றன என்பதும் வேதனைக்குரியது. தடுப்பூசி விநியோகத்தில் சமத்துவம் தேவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் பேராசிரியர் Sarah Gilbert சுட்டிக்காட்டியுள்ளார்.