கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடுத்தடுத்து 3 புயல்கள் மிக குறைந்த இடைவெளியில் தாக்க இருப்பதாக மாகாணத்தின் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார தொடக்கத்தில் தாக்கிய புயல் மற்றும் கனமழையில் இருந்து மக்களும் மாகாணமும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், அடுத்த அதிர்ச்சி தகவலை மாகாணத்தின் வானிலை ஆய்வாளர் Kristi Gordon வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், இன்னும் குறைந்த கால இடைவெளியில் 3 புயல்கள் மாகாணத்தை தாக்க இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமின்றி, இந்த 3 புயல்களால் ஏற்கனவே இந்த இலையுதிர்காலத்தில் மாகாணம் பல பகுதிகளில் கண்ட சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவை விட 200 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதன் இரவு முதல் வெள்ளி அதிகாலை வரை தென் கடலோரப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவுடன், முதல் புயல் புதன்கிழமை பிற்பகுதியில் கடற்கரையைத் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ வான்கூவர் மற்றும் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு, குறிப்பாக மலைகளுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பகல் 40 முதல் 80 மி.மீ அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த புயலானது பலமிழந்த நிலையிலேயே காணப்படும் எனவும், அதிக தாக்கம் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.வடக்கு வான்கூவர் தீவில் 50 முதல் 100 மிமீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடாவின் தகவலின்படி, புதன் பிற்பகல் தொடங்கி வியாழன் பிற்பகல் வரை மழை தொடரும் என்றே தெரியவந்துள்ளது. ஏற்கனவே மூழ்கியுள்ள நிலப்பரப்பில் பலத்த காற்று மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.