அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில், காணும் இடமெல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காட்சியளிக்கின்றன.
அரசு அலுவலர்கள், பாதுகாப்புக்காக சாலையோரமாக தடுப்புகளையும், தற்காலிக பாலங்களையும் அமைத்துள்ளார்கள். மனிதர்களின் பாதுகாப்புக்காக அல்ல, நண்டுகளின் பாதுகாப்புக்காக…
அதாவது, இது நண்டுகளின் இனப்பெருக்கக் காலம். அக்டோபர், நவம்பர் மாதங்களில், இந்த சிவப்பு நண்டுகள் காடுகளிலிருந்து கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்.
சரியாக இந்த காலகட்டத்தை கணித்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் ஆண் நண்டுகள், வழியில் தங்கள் துணையான பெண் நண்டுகளை அழைத்துக்கொண்டு கடலை நோக்கிப் பயணிக்கின்றன.இந்தியப் பெருங்கடலுக்குச் சென்ற ஜோடிகள் இணைய, கருவுற்ற பெண் நண்டுகள் ஒவ்வொன்றும் ஆளுக்கு 100,000 முட்டைகளையிடும்.
அந்த முட்டைகள் பொறித்ததும், அவற்றிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து தங்கள் வீடான காடுகளை நோக்கிப் பயணிக்கும். இலட்சக்கணக்கான நண்டுகள் பொறித்தாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை மீன்கள் முதலான கடல் உயிரிகள் சாப்பிட்டுவிடும். அப்படி சாப்பிட்டுப்போக தப்பிப் பிழைக்கும் நண்டுகள் தங்கள் வீடு நோக்கி நடைபோடும்.இந்த இயற்கை ஆச்சரியத்துக்காக, அரசாங்க அலுவலர்கள் முன்னேற்பாடுகள் செய்துகொடுக்கிறார்கள். நண்டுகள் பத்திரமாக இனப்பெருக்கம் செய்வதற்காக, கடலுக்குச் செல்வதற்காக பாதுகாப்பான வழி அமைத்துக்கொடுக்கிறார்கள் அவர்கள்.
அத்துடன், சுற்றுலாப்பயணிகள் முதலானோர் நண்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலையோரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு நண்டுகளின் பயணத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.பல நாடுகளில் இந்த நண்டுகளை மக்கள் விருந்தாக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் தீவில் இந்த நண்டுகளைப் பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.