பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை
சென்னை: இனிமேல் தமிழகத்திற்கு வர, கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இ – பதிவு அவசியம் என்று அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், பயணத்திற்குக் முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ‘நெகடிவ்’ சான்றிதழை கொண்டு வருவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி இருந்தது.
இந்த நடைமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவைத் தவிர, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள், கொரோனா சான்றிதழையோ அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழையோ கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால், தமிழகத்திற்கு வருவதற்காக இ – பதிவு செய்திருக்க வேண்டும்.
இ-பதிவு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 36,220 பேர் பலியாகினார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கொரோனா தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு தற்போது, விமானப் பயணத்திற்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
தடுப்பூசி பாதுகாப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.
அடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரையான மோல்னுபிரவீர் அறிமுகமாகியிருப்பதும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த மாத்திரை, கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும், இறப்பையும் குறைக்கும் என்று, இந்த முதல் வாய்வழி மருந்தை தயாரித்த மருந்து நிறுவனமான மெர்க் (Merck)கூறியுள்ளது.
அதற்போது, நம் நாட்டில் இந்த மருந்தை அனுமதிப்பது தொடர்பாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI), மருத்துவத் தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.