தேசிய பாதுகாப்பு கல்லூரி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

இலங்கையின் தேசிய தேவைகளை உறுதிப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு, இராஜதந்திர முறைமை மற்றும் அரச கொள்கை பிரிவுகளின் தந்திரோபாயச் சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவதே இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் நோக்கமாகும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு மூலோபாய கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளைத் தேடுவதை தவிர வேறு வாய்ப்புகள் காணப்படவில்லை.

முப்படையினர், காவல்துறை மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக இந்த கல்லூரி அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் நட்புறவு நாடுகள் வழங்கும் பாடநெறிகளுக்கு இலங்கை அதிகாரிகளில் சிலர் உள்ளீர்க்கப்படுவது, பாரிய பிரதிபலன்களை கொடுப்பினும், மேலும் பலருக்கு அந்த வாய்ப்புகள் இல்லாது போகிறது.எனினும், இந்த பாதுகாப்புக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் , ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கொழும்பு பல்கலைக்கழகம், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விசேட நிபுணர்களே இதன் பாடவிதான பரிந்துரைக் குழுவின் உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.

சீன அரசாங்கத்தால் கேட்போர்கூடம் ஒன்றையும், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நூலகம் ஒன்றையும் நிர்மாணிப்பதற்கான பங்களிப்பு பெற்றுக்கொடுத்துள்ளதுடன், நூலகத்துக்கான புத்தகங்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கமும் முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன் முதலாவது பாடநெறி, நாளை முதல் 2022 ஓகஸ்ட் மாதம் வரையான 10 மாதக் காலப் பகுதிக்கு நடத்தப்பட உள்ளது.இதற்காக, முப்படை அதிகாரிகள் 27 பேர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 04 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். குறித்த கல்லூரியானது கொழும்பு – 03, காலி வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு உரித்தான மும்தாஜ் மஹால் கட்டடத்தில், அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE