பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் மீன்பிடித்தல் தொடர்பில் இருந்த பிரச்சினை சொற்போராக இருந்துவந்த நிலையில், தற்போது இரு நாடுகளும் செயலில் இறங்கியுள்ளன.
பிரித்தானியா சில பிரெஞ்சுப் படகுகளுக்கு மீன் பிடி உரிமம் வழங்காத நிலையில், பழிக்குப் பழியாக, மீன் பிடி உரிமம் இல்லாமல் மீன் பிடித்ததாகக் கூறி, பிரித்தானிய படகு ஒன்றை சிறைபிடித்து தன் சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டியுள்ளது பிரான்ஸ்.
அத்துடன், இதுவரை தூதரக அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த பிரித்தானியாவும், பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் முதன்முறையாக வெளிப்படையாக வெடித்துள்ளது.பிரித்தானியாவிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற Cornelis Gert Jan என்ற மீன்பிடிபடகை பிரான்ஸ் அதிகாரிகள் மடக்கி, அதை பிரெஞ்சுத் துறைமுகம் ஒன்றில் கொண்டு நிறுத்தியுள்ளார்கள். சட்டவிரோதமாக அந்த படகு மீன் பிடித்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்ட, அது பிரான்சால் வேண்டுமென்றே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக படகின் உரிமையாளார்கள் கூறுகிறார்கள்.
அந்த படகின் கேப்டனுக்கு 63,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க இருப்பதாக பிரான்ஸ் அச்சுறுத்தியுள்ள நிலையில், பிரெக்சிட் பிரச்சினையில் தான் பகடைக்காயாகா ஆக்கப்பட்டுள்ளதாக அந்த படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், முதன்முறையாக தாங்களும் பழிவாங்குவோம் என்று பிரித்தானியா கூறியுள்ள நிலையில், நேற்று பிரித்தானிய அமைச்சர்கள் பிரான்சுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளார்கள். இன்னொரு பக்கம், பிரச்சினை பெரிதாகுமானால் அதை எதிர்கொள்வதற்காக கடற்படையின் இரண்டு ரோந்து படகுகள் தயாராக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது உடனடியாக அதற்கான அவசியம் இருக்காது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.