பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றுநோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் மாதாந்த கட்டணத்தை செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்த தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். எப்படியிருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.