கோவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கும், தடுப்பூசி திட்டத்திற்கும் அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
சேவைக்காலம் முடிந்து நாடு திரும்பும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz ) இன்று ஜனாதிபதியை சந்தித்து விடைபெற்றுக்கொண்டார். இது குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கான முயற்சிகளுக்கு தூதுவர் டெப்லிட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தனது பதவிக்காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி மற்றும் அரசியல்/பொருளாதார ஆலோசகர் சூசன் வால்கே ஆகியோரும் சந்திப்பின் போது உடனிருந்தனர்.