கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய அனைத்துலக மாநாடாகவும் அதிகளவில் உலகத்தலைவர்கள் ஒன்று கூடும் மாநாடாகவும் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அடுத்தவாரம் இடம்பெறும் காலநிலை மாநாடு பதிவாக உள்ளது.
இந்தப் பின்னணியில் இந்த மாநாட்டில் பங்கேற்கவரும் சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக பரப்புரைகளும் தீவிரமடைந்து வருகின்றன. அந்தவகையில் கோட்டாபாயவின் பயணம் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையிலான முழுப்பக்க ஆக்கம் ஒன்று ஸ்கொட்லாந்தை தளமாக கொண்ட தி ஹெரால்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் கிளாஸ்கோ நகருக்கு வருவதான செய்தி ஸ்கொட்லாந்து மக்களுக்கு இன்னொரு முழுப்பக்க ஆக்கமாக தி ஹெரால்ட் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.
கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாநாட்டின் முக்கிய விடயமாக உலகளாவிய காடழிப்புச் சிக்கல் மற்றும் அதனால் உருவாகும் பருவநிலைத்தாக்கங்களும் ஆய்வுசெய்யபடவுள்ள நிலையில், இலங்கையில் தமிழர் தாயக பகுதிகளிலும் காடழிப்பு என்பது ஒரு சாதாரண விடயமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் வடக்கு கிழக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை கைப்பற்றி, காடுகளை அழித்து அந்த பிரதேசங்களில் தென்னிலங்கை மக்களை குடியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இந்த ஆக்கத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால், தமது காணிகளை விடுவிக்குமாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டி புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் தமிழர்களின் நிலங்கள் கைப்பற்றப்படுவதை தடுப்பதற்கான நேரம் இதுவெனவும் அதில் கூறப்பட்டுள்ளது.