பிரிட்டிஷ் கொலம்பியாவில், உள் அரங்கங்களிலானாலும் சரி, திறந்த வெளியிலானாலும் சரி, மக்கள் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன, முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்… இந்த புதிய நடைமுறை, அடுத்த திங்கட்கிழமை, அதாவது அக்டோபர் 25 முதல் அமுலுக்கு வருகிறது.
அதன்படி, 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருக்கும்பட்சத்தில், அவர்கள் ஹாக்கி விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள், சினிமா தியேட்டர்கள் முதலான இடங்களுக்குச் செல்லலாம். இது ஏற்கனவே தெரிந்த விடயம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், முன்பு இத்தகைய இடங்களில் 50 சத்விகிதம் பேர் மட்டுமே கூட அனுமதி இருந்தது.
திங்கட்கிழமையிலிருந்து, இந்த இடங்களில் 100 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் கூடலாம். ஒரே நிபந்தனை, அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அவ்வளவுதான்! பிரிட்டிஷ் கொலம்பிய தடுப்பூசி அட்டைகள் எங்கெல்லாம் பயன்பாட்டில் உள்ளனவோ, அங்கெல்லாம் இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இருந்தாலும், Northern Health, Interior Health மற்றும் eastern Fraser Valley ஆகிய இடங்களில் மட்டும், உள்ளூர் மட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.இந்த மாற்றங்கள், உள்விளையாட்டு அரங்கங்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், தியேட்டர்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் பார்ட்டிகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
ஆனால், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் முதலானோர் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாது. மாஸ்க் அணிதல் என்னும் கட்டுப்பாடு தொடரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.இந்த மாற்றங்கள் போக, திங்கட்கிழமை முதல் உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் அமர்ந்துதான் உணவருந்தவேண்டும் என்ற கட்டுப்பாடும் விலக்கிக்கொள்ளப்பட உள்ளது. ஆனாலும், கட்டிடங்களுக்குள் நடமாடும்போது மக்கள் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும்.