பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதார ஊழியர்களில் 5,500 பேர்கள் இன்னும் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய நிர்வாகம் அளித்திருந்த காலக்கெடு முடிய இன்னும் ஒருவாரகாலமே எஞ்சியுள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மாகாண சுகாதார அமைச்சர் அட்ரியன் டிக்ஸ் தெரிவிக்கையில், நீண்ட கால காப்பகங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான இல்லங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் உட்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ காரணங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் காலக்கெடு முடிவடைந்த பின்னரும் பணியில் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் மொத்தமுள்ள 129, 924 சுகாதார ஊழியர்களில் 5,512 பேர்கள் மட்டுமே இதுவரை தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளாதவர்கள் என தெரிய வந்துள்ளது. அக்டோபர் 26ம் திகதிக்குள் இவர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுடன், 35 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.அக்டோபர் 26ம் திகதி காலக்கெடுவை மீறுபவர்கள் மாகாணத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், மாகாண நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் நீண்ட கால காப்பகங்கள் உள்ளிட்ட இல்லங்கள் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்ற கவலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.