கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை சீக்கிரம் வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரித்தானிய குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய துறைமுகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் முதலான பொருட்களைக் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன சாரதிகள் தட்டுப்பாடு காரணமாக, துறைமுகங்களிலிருந்து பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால், பண்டிகை காலங்களுக்கும், சொல்லப்போனால் பொருளாதாரத்துக்குமே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை சீக்கிரம் வாங்கத் துவக்குமாறு அவர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதற்கிடையில், சிறு கப்பல்களில் கண்டெய்னர்களை ஏற்றி சிறு துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சூழ்நிலை மாறும் என்று கூறியுள்ள சில அரசியல்வாதிகள், அரசு நிலைமையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, கனரக வாகனங்களை இயக்க பயிற்சி அளித்தல் போன்ற விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் ஏற்ற நேரத்தில் மக்களுக்குக் கிடைக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.